இரண்டு சிறுமிகள் மீதான தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக டொராண்டோ பொலிஸார் 52 வயது கட்டிட தொழில் கண்காணிப்பாளர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2025 வரை குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வர்டுக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பணிபுரிந்தபோது இந்த சம்பவங்கள் நடந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
விசாரணை அடிப்படையில் குறித்த நபர் 8 வயது மற்றும் 10 வயது சிறுமியுடன் “நட்பாக” பழகியுள்ளார் எனவும் மேலும் இருவரையும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 14 ஆம் திகதி சந்தேக நபர் சிறுமியின் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து சிறுமிகளை வெளியே இழுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் திகதி, குழந்தைகள் மற்றும் இளைஞர் பாதுகாப்பு மையம் (CYAC) மற்றும் காவல்துறையின் 23 பிரிவின் உறுப்பினர்கள் டொராண்டோவைச் சேர்ந்த 52 வயதான ஆஸ்கார் காம்போஸ் என்ற குறித்த நபரை கைது செய்தனர்.
அவர் மீது ஊடுருவல், பாலியல் வன்கொடுமை, பாலியல் தலையீடு, குழந்தைகள் ஆபாசப் படங்களை தயாரித்தல் மற்றும் குழந்தைகள் ஆபாசப்படங்களை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரையில் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவோ நிரூபிக்கப்படவோ இல்லை என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், அக்டோபர் 17 அன்று டொராண்டோ நீதிமன்றத்தில் காம்போஸ் ஆஜரானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தகவல் உள்ள எவரும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

