5.6 C
Scarborough

இயலாமை உடையவர்களுக்கு அனுதாபம் தேவையில்லை – சுயமாகச் செயற்படுவதற்கான சூழலே அவசிம்!

Must read

இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படவேண்டிய அவசியமில்லை, அவ்வாறு அனுதாபப்படுவது அவர்களை ஒரு விதத்தில் அவமரியாதைப் படுத்துவதுபோன்றாகும். இயலாமை உடைய நபர்கள் தமது கடமைகளைச் சுயமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதையே செய்ய வேண்டியிருப்பதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார்.

இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயலமர்வுத் தொடரில், முதலாவது செயலமர்வு தொழில் அமைச்சில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், தொழில் அமைச்சு மற்றும் நிறுவனங்களில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, இயலாமை உடைய நபர்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்கள் சமூகமயமாக்கப்படும் வரை, சட்டதிட்டங்கள் மூலம் ஒருங்கிணைப்பை அடைவதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் மாத்திரம் இந்தக் குழுவினருக்குத் தேவையான ஆதரவை வழங்குவது போதுமானதாக இருக்காது என்றும், மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயலாமை உடைய நபர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தனியார் துறையிலும் இயலாமை உடைய நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, இயலாமை உடைய நபர்கள்  வேலைசெய்யக் கூடிய வகையில் பணியிடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார். இதைச் செயல்படுத்த, முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் இயலாமை உடைய நபர்கள் பங்கேற்பதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதன் ஊடாக இயலாமை உடைய நபர்களும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஓர் அங்கமாக இருப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இயலாமை உடைய நபர்கள் ஏனையவர்களைச் சார்ந்தவர்களாக அன்றி,  பொருளாதார செயல்முறைக்குப் பங்களிப்பவர்களாக இருக்கும் நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இயலாமை உடைய நபர்களைக் கொண்ட வளவாளர்களினால் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. மேலும் இந்தச் செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட இயலாமை உடைய நபர்கள் தங்கள் அனுபவங்களையும், தங்கள் பணியிடங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் அனைத்து அமைச்சுக்களையும் இலக்காகக் கொண்டு இதுபோன்ற செயலமர்வுகளை நடத்துவதற்கு இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

இச்செயலமர்வில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் இந்ரக உபேசேகர, இத்திட்டத்தின் அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள், இயலாமை உடைய நபர்களுக்கான அமைப்புக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article