15.7 C
Scarborough

இந்திய வீராங்கனை திவ்யா வரலாற்று சாதனை!

Must read

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மகளிர் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

இந்த மகத்தான வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வசப்படுத்தும் நான்காவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெறுகிறார் திவ்யா தேஷ்முக். இவருக்கு முன்பாக கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி மற்றும் ஹரிகா ஆகிய இந்திய செஸ் வீராங்கனைகள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருந்தனர்.

மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி – திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக், ஹம்பியுடன் 41-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இதையடுத்து, நேற்று 2-வது ஆட்டத்தில் ஹம்பி – திவ்யா மீண்டும் மோதினர். இந்த ஆட்டம் 34-வது நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 28) டை-பிரேக்கர் போட்டி நடந்தது. விறுவிறுப்பான இந்த டை-பிரேக்கரில் வென்று 2.5 – 1.5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வென்றார் திவ்யா தேஷ்முக்.

உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறையாகும். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றனர். 8 பேர் கலந்து கொள்ளும் கேண்டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் வென்ஜுன் ஜூவுக்கு எதிராக போட்டியிடுபவர் தேர்வு செய்யப்படுவார்.

இறுதிப் போட்டியில், 38 வயதான ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை வீழ்த்திய 19 வயதான நாக்பூரை சேர்ந்த திவ்யா தேஷ்முக் ஆனந்தக் கண்ணீருடன் வெற்றியைக் கொண்டாடினார். சாம்பியன் பட்டம் வென்ற திவ்யாவுக்கு ரூ.43.24 லட்சம் பரிசுத் தொகையும், 2-வது இடத்தை பெற்ற கோனேரு ஹம்பிக்கு ரூ.30.26 லட்சம் பரிசுத் தொகையும் கிட்டியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article