கனடாவின் கால்கரியில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனவெறி குற்றச்சாட்டு
குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது தொடர்புடைய காணொளியானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் பரவலான சீற்றத்தையும் இனவெறி குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.
பிரெய்டன் ஜோசப் ஜேம்ஸ் பிரெஞ்ச் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அந்தப் பெண்ணின் ஜாக்கெட்டைப் பிடித்து, மீண்டும் மீண்டும் குலுக்குவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
பின்னர் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தண்ணீர் போத்தலை எடுத்து, அவர் முகத்தில் தண்ணீரை தெளித்துள்ளான். அத்துடன் சுவற்றில் மோத வைத்துள்ளான். பின்னர் அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது.
கால்கரி பொலிசார் உறுதி
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். பலர் இச்சம்பவத்தை நேரில் பார்த்தும், எவரும் உதவிக்கு முன்வரவில்லை. ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி 1.40 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது என்றே கால்கரி பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
அத்துடன், சுமார் 30 நிமிடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழிப்பறிக்கு முயன்றதாக மட்டுமே தற்போது அந்த நபர் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும், இன ரீதியான தாக்குதல் நடந்துள்ளதா என்பது தொடர்பில் உரிய அமைப்பு விசாரித்து வருவதாகவும் கால்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.