சுற்றுலா இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ‘அண்டர்சன் – தெண்டுல்கர்’ கிண்ண 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
அவற்றின் விபரம் பின்வருமாறு:-
1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஓட்டங்கள் (இரு அணிகளும் சேர்ந்து 7,187 ஓட்டங்கள்) அடிக்கப்பட்ட தொடராக இது சாதனை படைத்துள்ளது.
2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 300க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் (14 முறை) அடிக்கப்பட்ட தொடர்களின் சாதனை பட்டியலில் ஆஷஸ் தொடருடன் இது முதலிடத்தில் இணைந்துள்ளது.
3. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வீரர்கள் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த தொடராக இது சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் 9 வீரர்கள் 400 ஓட்டங்களுக்கு மேல் அடித்தனர். 1975-76-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் – அவுஸ்திரேலியா மற்றும் 1993-ம் ஆண்டு இங்கிலாந்து – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் தலா 8 வீரர்கள் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கப்பட்டதே இந்த வகையில் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.
4. இந்த தொடரில் இந்தியா தரப்பில் 12 சதம், இங்கிலாந்து சார்பில் 9 சதம் என மொத்தம் 21 சதங்கள் பதிவாகியுள்ளன. 1955-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் – அவுஸ்திரேலியா தொடரில் 21 சதங்கள் பெறப்பட்டதே தொடர் ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சதம் எண்ணிக்கையாக இருக்கிறது. அச்சாதனை இப்போது சமன் செய்யப்பட்டுள்ளது.
5. இந்த தொடரில் இரு அணிகளும் சேர்ந்து 19 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப்கள் அமைத்தன. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப்கள் அமைக்கப்பட்ட தொடர்களின் சாதனை பட்டியலில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் ஆகியவற்றுடன் முதலிடத்தில் இணைந்துள்ளது.