இந்தியா – சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நாளை ( 15) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் ஏற்பட்ட இராணுவ மோதலுக்குப் பிறகு முதல்முறையாக அவர் சீனா சென்றுள்ளார்.
சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங்கை சந்தித்த ஜெய்சங்கர், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா – சீனா இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், இராணுவ மோதலுக்குப் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி இருப்பது இந்தியாவில் பரவலாகப் பாராட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.