இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 51 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை தென் ஆபிரிக்கா 1 – 1 என சமப்படுத்தியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இரண்டாவது போட்டியில் குவின்டன் டி கொக் அதிரடியாக குவித்த அரைச் சதம், ஒட்நீல் பார்ட்மன் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா குவின்டன் டி கொக்கின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.
குவின்டன் டி கொக் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 90 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமுடன் 2ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களை குவின்டன் டி கொக் பகிர்ந்தார்.

