இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்காக நீண்ட கால விசாவில் வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குள் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றால் 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இது மட்டுமின்றி, அந்தமான் நிகோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதானால் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இதுபோன்ற பழைய சட்டங்களை ரத்து செய்துவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 11-ம் திகதி தாக்கல் செய்துள்ளது.