இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கினால் அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். கச்சா எண்ணை வாங்குவதன் மூலம் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.
அதன்படி கடந்த 7-ந் திகதி இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இந்த வரிவிதிப்பு வரும் 27-ந்திகதி முதல் அமலுக்கு வர உள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி வரிவிதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம், அதிலும் குறிப்பாக ஆடை, தோல், ரத்தினங்கள், நகைகள் என பல்வேறு துறைகள் பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை. ரஷிய தலைவர் புடீன் நேற்று சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மேலும் கூடுதலாக வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக புடினை சந்திக்க செல்லும் முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.
சீனாவும் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகள் மீது நான் கூடுதல் வரி விதித்தால், அது ரஷியாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். அதை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் செய்வேன்.ஆனால் தற்போது வரி விதிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.