நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு ஒரு இந்தியர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் பிறகு ராணுவத்துக்கும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு கடந்த 18 மாத மாதங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 1,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் கடந்த 15-ம் திகதி நைஜர் நாட்டின் டோஸ்ஸோ பகுதியில் அல்-கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இந்திய தொழிலாளர்கள் ஆவர். ஓர் இந்திய தொழிலாளரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட இந்தியரை மீட்க உள்ளூர் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். நைஜரில் வாழும் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம் என நைஜரில் செயல்படும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய தொழிலாளி, காஷ்மீரை சேர்ந்த ரஞ்சித் சிங் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் கடத்தி செல்லப்பட்டவர் அனைவரும் மும்பையை சேர்ந்த டிரான்ஸ்ரயில் லைட்டிங் நிறுவனத்தின் நைஜர் நாட்டின் கிளையில் பணியாற்றிவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.