இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹாசில்வுட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஹாசில்வுட் ஆட முடியாமல் போயுள்ளது. முதலில் ஸ்கேன் எடுத்து ஹாசில்வுட் உடல் தகுதி பெற்று விட்டார், பெர்த் டெஸ்ட்டில் ஆடுவதற்குத் தடையில்லை என்றெல்லாம் கூறினார்கள், ஆனால் மீண்டும் ஸ்கேன் எடுத்த போது தசைக் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விலகியுள்ளார்.
ஏற்கெனவே கேப்டன் கமின்ஸ் காயத்தினால் பெர்த்தில் ஆட முடியாமல் போனதில் பின்னடைவு கண்ட ஆஸ்திரேலியா இப்போது ஜாஷ் ஹாசில்வுட்டின் காயத்தினாலும் பின்னடைவு கண்டுள்ளது. முக்கிய பவுலர்களில் இப்போது மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன் மட்டுமே உள்ளனர், இவர்களோடு ஆல்ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்ட்ர் உள்ளனர்.
இருந்தும் ஜாஷ் ஹாசில்வுட்டுக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாக்கெட் அறிமுக வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் மைக்கேல் நீசர் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கமின்ஸ் 2வது பிரிஸ்பன் டெஸ்ட்டுக்கு திரும்பும்போது ஹாசில்வுட்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனாலும் இந்த இரண்டு செய்திகளுமே உறுதிப்படுத்தப்படாத செய்திகள்.
மார்க் உட் நிலை என்ன? இங்கிலாந்தின் அதிவேக பவுலர் மார்க் உட்டும் ஹாம்ஸ்ட்ரிங் காயத்திற்காக ஸ்கேன் செய்யப்பட்டு சீரியஸ் காயம் அல்ல என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் பெர்த் டெஸ்ட்டில் அவரை எடுத்து ரிஸ்க் எடுப்பார்களா என்பது தெரியவில்லை. இவர் வியாழனன்று 8 ஓவர்களை இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக வீசினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியை கடந்த 15 ஆண்டுகளில் படுபலவீனமான ஆஸ்திரேலிய அணி இதுதான் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் சீண்டியுள்ளார். ஆனாலும் ஆஷஸ் தொடரைச் சாதகமான அணி இங்கிலாந்து என்று கூறுவதற்கில்லை, ஆஸ்திரேலியாதான் இப்பவும் ஃபேவரைட்ஸ் என்று ஆண்டர்சன் கூறியுள்ளார்.
hindutamil

