ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
இதையும் படியுங்கள்: பிரதமர் மோடியை விமர்சித்து, ராகுல் காந்தியை பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்களான அடல் மற்றும் குர்பாஸ் முறையே ரன் எதுவும் எடுக்காமல் மற்றும் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் விளைவாக, வங்காளதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.