ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்க கொள்கைகளுடன் ஒத்துபோகின்றதா என்பதை பரிசீலனைக்கு உட்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம் திட்டமிட்டுள்ளார்.
அவரின் இந்த நகர்வு ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மீள்பரிசீலனையின் பின்னர் ஆக்கஸ் ஒப்பந்தம் முற்றிலுமாக இரத்து செய்யக்கூடும் என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.
மறுபரிசீலனைக்காக 30 நாட்கள்வரை செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக்கஸ் ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதற்கு ஆஸ்திரேலியா தயாரானது. இது தொடர்பில் பைடன் ஆட்சியின்போது சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன.
தற்போது அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் செயற்படுவதால் மேற்படி திட்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கனடாவில் நடைபெறும் ஜி – 7 மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமரும் பங்கேற்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடனான இரு தரப்பு சந்திப்பின்போது ஆக்கஸ் விவகாரம் பற்றியும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பசுபிக் பிராந்திய பாதுகாப்பில் ஆஸ்திரேலியா முக்கிய வகிபாகம் வகிக்கின்றது. இந்நிலையில் தனது கடற்படை பலத்தை வலுப்படுத்தும் நோக்கிலேயே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை கடற்படையில் இணைப்பதற்கு வியூகம் வகுக்கப்பட்டது. ஆக்கஸ் திட்டம் இரத்து செய்யப்படுமானால் அது கடற்படைக்கு பின்னடைவாக அமையக்கூடும்.
மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தமே ஆக்கஸ் எனப்படுகின்றது. இது சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் கூட்டணியாகவும் கருதப்பட்டது.