ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் ஆடியிருக்கலாம் என்று கூறுகிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அஸ்வினின் ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டில் 7.2 என்ற பிரமாதமான சிக்கன விகிதத்தில் 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த சீசன் அவருக்குச் சரியாக அமையவில்லை. ரூ.9.75 கோடிக்கு அவரை சிஎஸ்கே நம்பி எடுத்தாலும், அவர் பந்து வீச்சு வீழ்ச்சியடைந்திருந்தது. ஓவருக்கு சராசரியாக 9.12 ரன்கள் என்று கொடுத்தார். உலக அளவில் நடைபெறும் பிற லீகுகளில் ஆடும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன் என்கிறார் அஸ்வின்.
பிற லீகுகள் என்பதும் ஒரு நல்ல அனுபவம்தான், இந்திய வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை, காரணம் பிசிசிஐ-யின் கிடுக்கிப் பிடி சுயநல விதிமுறைகளே. சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் ஆகிய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால்தான் பிற கிரிக்கெட் லீகுகளில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் ஆட முடியும்.
இந்நிலையில், யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அஸ்வின் ஓய்வு குறித்து கூறும்போது, “அஸ்வின் ஏன் ரிட்டையர் ஆனார் என்பது பற்றி எனக்கு உறுதியாக எதுவும் தெரியாது.
நான் அவரிடத்தில் இருந்திருந்தால் இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆடியிருப்பேன். அஸ்வினுக்கு பணம், பெயர், புகழ் ஒரு பெரிய விஷயமல்ல. இவையனைத்தும் அவருக்கு ஏராளமாக கிடைக்கப்பெற்றன. இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆடி, அதன் பிறகு மற்ற லீகுகளில் ஆடியிருக்கலாம்.
அஸ்வினைப் போல் மற்ற வீரர்களும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் வாய்ப்பு இல்லை எனும் போது பிற லீகுகள் நோக்கிச் செல்லலாம். ஆனாலும் ஐபிஎல் தொடரில் ஆடுவதால் கிடைக்கும் வெளிச்சம் மற்றும் அங்கீகாரம் பிற லீகுகளில் அவ்வளவாகக் கிடைக்காது.
எனவே பிற லீகுகளில் ஏதோ ஆட வேண்டுமே என்பதற்காக ஆடலாமே தவிர ஐபிஎல் தொடர்களில் கிடைக்கும் பலன்களுக்கு அருகில் கூட மற்ற லீகுகள் நிற்காது. ஐபிஎல் கிரிக்கெட் பெற்ற சிறந்த வீரர் அஸ்வின். அதுவும் கிறிஸ் கெயிலை அவர் அடிக்கடி வீழ்த்தியதில்தான் அஸ்வினுக்கு அங்கீகாரம் வெளிப்படையாகக் கிடைத்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் அட்டாக்கிங் ஆகவும் வீசுவார், சிக்கனமாகவும் வீசுவார். மெகா ஏலத்திற்குப் பிறகே 3 ஆண்டு சுழற்சியை விட்டு விட்டு அவர் பாதியிலேயே போவது ஆச்சரியமாக உள்ளது. இங்கு ஓய்வு பெறும் வீரர்கள் அந்நிய லீகுகளில் பயிற்சியாளர்களாகவும் வீரர்களாகவும் ஆக முடியும் என்பது மகிழ்ச்சியானதே” என்று கூறினார்.