தமது புதிய அமைச்சரவையில், பொது நிதி திட்டங்களை நிர்வகித்தல் மற்றும் ஊழல் இல்லாத விலைமனுக்களை உறுதி செய்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு டியெல்லா என்ற செயற்கை நுண்ணறிவு “அமைச்சர்” இடம்பெறுவார் என அல்பேனிய பிரதமர் எடி ரமா அறிவித்துள்ளார்.
அல்பேனிய மொழியில் டியெல்லா என்றால் “சூரியன்” என்று பொருள்படும். “உடல் வடிவம் இல்லாத, செயற்கை நுண்ணறிவினால் மாத்திரம் இந்த அமைச்சரவை உறுப்பினரான டியெல்லா உருவாக்கப்பட்டுள்ளார்.
டியெல்லா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இ-அல்பேனியா தளத்தில் மெய்நிகர் உதவியாளராக பணியில் இணைக்கப்பட்டார்.
செயற்கை நுண்ணறிவு அமைப்பு “100% ஊழல் இல்லாத” பொது விலைமனுக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று எடி ரமா கூறினார்.
அவரது சோஷலிசக் கட்சி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் 140 ஆசனங்களில் 83 ஆசனங்களை பெற்று, நான்காவது முறையாகப் பதவியேற்றது.
சோஷலிசக் கட்சி தனியாக ஆட்சி செய்ய முடியும் என்றாலும், 2030 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான அவர்களின் வாக்குறுதியை விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர்.
அரசாங்கத்தில் டியெல்லாவின் அதிகாரபூர்வ நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் இந்த நியமனம் நாட்டில் நீண்டகாலப் பிரச்சினையான ஊழலைச் சமாளிக்க அரசாங்கத்துக்கு உந்துதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.