அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், சின்லி நகரில் உள்ள விமான நிலையத்தில் நோயாளியை ஏற்றுவதற்காக நியூ மெக்சிகோவின் அல்புகியூர்கியில் இருந்து புறப்பட்ட தனியார் சிறிய ரக மருத்துவ அம்புலன்ஸ் விமானம் நேற்று (05) விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது அல்புகியூர்கியை தளமாகக் கொண்ட சிஎஸ்ஐ ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பீச்கிராஃப்ட் 300 ரக விமானமாகும். இது சின்லி முனிசிபல் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஓடுதளத்தில் விழுந்து தீப்பிடித்ததாக நவாஜோ பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்து நேற்று நண்பகல் 12:40 மணியளவில் நிகழ்ந்ததாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நவாஜோ நேஷன் தலைவர் பூ நைக்ரென், இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்து, “உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களின் இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது” என சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க பயணப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB)மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA)ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது