ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர் Allison Hooker ற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது உப இராஜாங்கச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க உதவி வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அலிசன் ஹூக்கர், அனர்த்தத்தினால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் குழுக்களை நாட்டிற்கு அனுப்புவதில் அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் அளித்த ஆதரவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி பொருளாதார குறிகாட்டிகளை உயர்த்தி வரும் நிலையிலே இலங்கைக்கு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் நீண்டகால அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளையும், விவசாயம், கால்நடைகள், சிறிய மற்றும் மத்திய தர கைத்தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வருமான வழிகளையும் மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் என்றும், இது தொடர்பாக அனைத்து நட்பு நாடுகளின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

