அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை முதன்முதலில் நேரில் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி, ஒருபோதும் விற்பனைக்கு இல்லாத சில இடங்கள் உள்ளன என்பது காணி விற்பனை துறையில் இருந்த உங்களுக்கு தெரியும் அதே போன்று கடந்த பல மாத பிரச்சாரத்தின் போது கனடாவின் உரிமையாளர்களான கனேடிய மக்களை நான் சந்தித்த பின்னர், கனடா ஒருபோதும் விற்பனைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாக கூறினார். ஆனால் கடந்த காலங்களைப் போன்று கூட்டாக செயற்படுவதன் மூலம் நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பக்கூடிய நிறைய விடயங்கள் உள்ளன என்றார்.
இச்சந்திப்பின் போது, கனடாவை 51வது மாநிலம் என்று அழைப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாக மார்க் கார்னி பின்னர் உறுதிப்படுத்தினார். இதன் போது கருத்துரைத்த டொனால்ட் ட்ரம்ப் என்ன நடந்தாலும் அமெரிக்கா எப்போதும் கனடாவுடன் நட்புடன் இருக்கும் என்று கூறினார். கடந்த காலங்களிள் கனடாவை 51வது மாநிலம் என அடிக்கடி அழைத்துவந்த டொனால்ட் ட்ரம்ப் பிரதமருடனான சந்திப்பின் பின்னர் வெளியிட்டுள்ள கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை பலராலும் பேசப்படுகின்றது.
இருவருக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த கனேடியப்பிரதமர் ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பை நடத்தியதாக உணர்ந்ததாகவும், அமெரிக்க-கனடா உறவுகளைப் பற்றி தான் நன்றாக உணர்கிறதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். இச்சந்திப்பின் போது மார்க் கார்னிக்கு ஏப்ரல் 28 ஆந் திகதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் கார்னியை பாராட்டினார், கார்னி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் கூறினார்.
கார்னியை மிகவும் திறமையான நபர் என்றும் கூறிய ட்ரம்ப் அது ஒரு சிறந்த தேர்தல், நாங்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம், கனடா மிகவும் திறமையான நபரை தேர்ந்தெடுத்தது என்று நான் நினைக்கிறேன். அத்துடன் வெள்ளை மாளிகையிலும், ஓவல் அலுவலகத்திலும் உங்களைக் கொண்டிருப்பது ஒரு மரியாதை என்றும் ட்ரம்ப் கூறினார்.
கார்னி க்கு எதிரான தனது ஒரே கேள்வி அமெரிக்கா ஏன் கனேடிய பொருளாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் இலவச இராணுவ பாதுகாப்பை ஏன் வழங்குகிறது என்பதுதான் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.