ஈரான் அணுசக்தித் திட்டங்கள் தொடா்பாக அமெரிக்க அரசுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக ஈரான் அரசாங்கம் நேற்று (8) அறிவித்தது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கூறியதாவது:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபுடன் அணுசக்தி விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். ஓமானில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும்.
ஈரான் மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்பது, நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது ஆகியவையே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருக்கும். தற்போதைய நிலையில், அமெரிக்கத் தூதருடன் ஈரான் பிரதிநிதிகள் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று அவா் கூறினார்.
மறைமுகப் பேச்சுவார்த்தை என்பதால் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளின் வாத, விவாதங்கள் ஓமான் மத்தியஸ்தா்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.
பராக் ஒபாமா ஆட்சிக் காலத்துக்குப் பிறகு அமெரிக்காவும் ஈரானும் இதுவரை நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகத்தான் ஈரான் வெகு வேகமாக அணுசக்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது என்ற அச்சம் எழுந்ததால் அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.