அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கனேடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
இந்தக் ‘குளிர் காலம்’ காரணமாக, அமெரிக்காவுக்கு கனேடியப் பயணிகள் வருகை குறைந்தது. தொடர்ந்து பத்தாவது மாதமாக இந்த வருகை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கனடாவின் புள்ளிவிபர அலுவலகத்தின் தரவுகளின்படி, விமானப் பயணம் 24% ஆகவும், சிற்றூந்து பயணம் 30% க்கும் அதிகமாகவும் குறைந்துள்ளது.
மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை “51வது மாநிலமாக” மாற்றுவது பற்றிய கருத்துகள், இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேலும் மோசமாக்கியுள்ளன.
இந்த நிலை, கனேடியர்கள் உள்நாட்டுச் சுற்றுலாவை நாட வழிவகுத்ததால், கனடாவின் சுற்றுலாத் துறை சாதனை படைத்து 59 பில்லியன் கனேடிய டொலரை ஈட்டியுள்ளது.
அதே சமயம், சில ஓய்வுபெற்ற கனேடியர்கள் அரசியல் பதற்றம் காரணமாக அமெரிக்காவில் உள்ள தங்கள் குளிர்கால வீடுகளை விற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

