அமெரிக்காவில் க்ரீன்கார்ட் வைத்திருக்கும் முதியோர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமைத் திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் விமான நிலையங்களில், 2ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்டுத்தி, க்ரீன்கார்ட் வைத்திருக்கும் முதியோர்களைக் குறி வைத்து அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர். தாங்களாக முன்வந்து க்ரீன் கார்ட்களை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
சிலர் குடியுரிமைத் திணைக்கள, அதிகாரிகளின் கெடுபிடிகளுக்குப் பயந்து தங்களது க்ரீன் கார்ட்களை ஒப்படைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், க்ரீன் கார்ட் வைத்திருக்கும் முதியோர்களுக்கு சட்டத் துறையிடமிருந்து வரும் அறிவுரை என்னவென்றால் யாரும் க்ரீன் அட்டையை ஒப்படைக்கத் தேவையில்லை. க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்கள், குடியுரிமைத் துறை நீதிபதியின் ஆலோசனையை பெறலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
க்ரீன் கார்ட்களை ஒப்படைக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட மூத்தக் குடிமக்களுக்காக குடியுரிமைத் துறை சட்டத்தரணிகள் கூறுகையில்,
அமெரிக்காவில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் பெற்றோர், அமெரிக்காவின் குளிர்காலத்தில் மட்டும் அதாவது 180 நாட்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவது வழக்கம்.
குளிர்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் போது நிச்சயம் அவர்களது க்ரீன் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும். இதனைக் காரணம் காட்டி நிராகரிக்க முடியாது. ஏனெனில், அமெரிக்க சட்டம், ஒருவர் 365 நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவிலிருந்து வெளியே சென்று எங்காவது தங்கியிருந்தால்தான் க்ரீன் கார்ட் உரிமத்தை இரத்துச் செய்வதற்காக பரிசீலிக்க முடியும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.