பிரிட்டிஷ் கொலம்பியாவைச் (B.C.) சேர்ந்த இருவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் தூய்மையான காற்று சட்டத்தை (Clean Air Act) மீறி, வாகனங்களின் புகையைக் கட்டுப்படுத்தும் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும் ‘Defeat Devices’ எனும் சட்டவிரோத உதிரிபாகங்களைக் கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
Coquitlam பகுதியைச் சேர்ந்த Philip John Sweeney மற்றும் Maple Ridge பகுதியைச் சேர்ந்த Kevin Paul Dodd ஆகிய இருவரும், சுமார் 33 மில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களைக் கடத்தியதாக 2024 இல் குற்றம் சாட்டப்பட்டு, 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறும் அபாயத்தில் இருந்தனர்.
இருப்பினும், அதிபர் Donald Trump தலைமையிலான புதிய நிர்வாகம், இத்தகைய சுற்றுச்சூழல் தொடர்பான விதிமீறல்களை இனி ‘குற்றவியல் வழக்குகளாக’ (Criminal Cases) விசாரிக்கப்போவதில்லை என கொள்கை மாற்றம் செய்துள்ளது.
இதன் விளைவாக அவர்களுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த முடிவைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இது போன்ற விதிமீறல்களுக்கு இனி அபராதம் போன்ற சிவில் நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

