14.9 C
Scarborough

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்ய தீர்மானிக்கவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

Must read

அதானி குழுமத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. மாறான வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து, அந்த இணக்கப்பாட்டை மீளாய்வு செய்வதற்கு மாத்திரமே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

குறித்த மீளாய்வு குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அதானி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (25)  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதானி குழுமத்தினால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்உற்பத்தி திட்டங்கள் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பில் அதானி நிறுவனமும் தெளிவுபடுத்தியிருந்தது.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை கடந்த அரசாங்கத்தால் இந்த திட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய மீளாய்வு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை மாத்திரமே அரசாங்கம் எடுத்துள்ளது. அதனைவிடுத்து வேறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மீளாய்வுக்குழு அதன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மீளாய்வின் பின்னர் அந்த அறிக்கைக்கமைய எவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வது என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும்.

வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்தது.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்து, கொள்வனவு விலைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காரணம் கடந்த அரசாங்கம் இணக்கப்பாடு தெரிவித்திருந்த விலைகளுடன் எம்மால் இணங்க முடியாது. எனவே தான் அதனை மீளாய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article