கனடாவை பொறுத்தவரை சீனா வளர்ந்து வருகின்ற மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடாக உள்ளதாக பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். அத்துடன் உக் ரைன் உடனான போரிலும் ரஷ்யாவுடன் சீனா ஓர் பங்காளியாக இருப்பதையும் அவர் விமர்சித்தார்.
புவியியல் சார் நிலையில் நோக்கும் போது China மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. நாங்கள் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார். கனடா அதன் நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் சிக்கியுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டமான தற்போதைய கருத்துக்கணிப்பின்படி மார்க் கார்னியின் லிபரல் கட்சியே முன்னிலை வகிப்பதாக அறியமுடிகிறது.
பதிலடி கொடுக்கும் நோக்கில் கனடா அமெரிக்க டொலருக்கு நிகராக விலையை நிர்ணயிக்க முயற்சிக்காது என்று மார்க் கார்னி கூறினார். ஆனால் முழு உலகளாவிய வர்த்தக முறைமையும் மறுசீரமைக்கப்படுவதாகக் கூறினார். அமெரிக்காவுடன் கொண்டுள்ள தொடர்பில் விரிசல் நிலை ஏற்படும்போது உறவு நிலையிலும் மாற்றம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றைத் தாண்டி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் கனடாவுக்கு உள்ளதாக கூறும் கனேடிய பிரதமர், அவை ஐரோப்பிய, ஆசிய, தெற்கத்திய பொதுச் சந்தை வலயமைப்பென உலகெங்கும் பரந்து விரிந்திருக்கின்றன என்றார்.