இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டொஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ஓட்டங்கள்), கில் (147 ஓட்டங்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ஓட்டங்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா ‘சேனா’ நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா) மட்டும் 148 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் ‘சேனா’ நாடுகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரரான வசிம் அக்ரம் 146 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.