3.5 C
Scarborough

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவரே அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தோடு தொடர்புடையவர்!

Must read

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள போண்டை கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜித் அக்ரம் (50) என்பவர் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என அந்த மாநில பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனை தெலங்கானா டிஜிபி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஜித் அக்ரம் ஹைதராபாத்தின் டோலிசவுகி பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் கூற்றுப்படி, தாக்குதல் சம்பவத்தின் போது சஜித்தை தடுத்து நிறுத்த முயன்ற நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் நவீத் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சஜித்திடம் இந்திய கடவுச்சீட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த நவம்பர் மாதம் சஜித் தனது இந்திய கடவுச்சீட்டையும் மகன் நவீத் தனது அவுஸ்திரேலிய கடவுச்சீட்டையும் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் சென்றதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தெலங்கானா டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சஜித் ஹைதராபாத்தில் பி.காம் படிப்பை முடித்த பின்னர் வேலை தேடி அவுஸ்திரேலியா சென்றதாகவும், அங்கு ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அவுஸ்திரேலியாவில் பிறந்ததால் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர்.

சஜித் அக்ரம் அவுஸ்திரேலியா குடிபெயர்ந்த பின்னர் கடந்த 27 ஆண்டுகளில் ஆறு முறை மட்டுமே ஹைதராபாத் வந்துள்ளதாகவும், பெற்றோரை சந்திப்பதற்கும் சொத்து தொடர்பான விடயங்களுக்காகவும் அவர் வருகை தந்ததாகவும் ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தபோதும், இறுதிச்சடங்கிற்காக அவர் இந்தியா வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் இருந்த காலகட்டத்திலும், 1998 க்கு முன்பும் சஜித்திற்கு எதிராக எந்தவித பொலிஸ் பதிவுகளும் இல்லை என்றும், அவரது நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினருக்கும் எதுவும் தெரியாது என்றும் தெலங்கானா டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article