கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா, அங்குள்ள சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் குறித்து புலம்பெயர் நிபுணர்களிடையே தீவிர விவாதங்களைத் தூண்டியுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவின் 2015 முதல் 2023 வரையிலான பதவிக் காலத்தை சர்வதேச மாணவர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கான ஒரு பொற்காலமாகப் பார்க்கின்றனர்.
லிபரல் கட்சியின் புலம்பெயர் கொள்கைகளால் இந்திய மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். கனடாவின் IRCC அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளில், 2015 மற்றும் 2024 க்கு இடையில் சுமார் 1.3 மில்லியன் இந்திய மாணவர்கள் கல்விக்கான அனுமதிகளைப் பெற்றுள்ளனர்.
ஆனால், 2015ல், 31,920 இந்திய மாணவர்கள் மட்டுமே கல்விக்கான அனுமதிகளைப் பெற்றிருந்தனர், இது மொத்த சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் 14.5 சதவிகிதமாகும். 2023ல், இந்த எண்ணிக்கை 278,250 என அதிகரித்தது, இது கனடாவில் உள்ள மொத்த சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் 40.7 சதவிகிதமாகும்.
இருப்பினும், கனேடிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கைகள், சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை வரம்பிடுதல் மற்றும் கல்வி அனுமதி செயல்முறைகளை கடுமையாக்குதல் உள்ளிட்டவையால், 2024ல் இந்திய மாணவர்களுக்கான கல்வி அனுமதி பெறுவதில் 4 சதவிகிதம் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தின் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டம் தொடர்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ட்ரூடோ அரசாங்கம் அந்த திட்டத்தை அழித்துள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த திட்டத்தை வேளாண் துறையில் பயன்படுத்திக்கொள்ள பொய்லிவ்ரே திட்டமிட்டுள்ளார், ஆனால் கனடியர்களிடமிருந்து வேலைகளைப் பறிக்கும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பியர் பொய்லிவ்ரே முக்கிய பங்காற்றுவார் என்றே கூறப்படுகிறது. புலம்பெயர் கொள்கைகள் குறித்த அவரது வாக்குறுதிகள் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொய்லிவ்ரே ஆட்சியைக் கைப்பற்றினால், கனேடியர்களு சுகாதாரம், வேலை மற்றும் வீட்டுவசதி கிடைப்பதில் இருக்கும் சிக்கல் காரணமாக சர்வதேச மாணவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
மட்டுமின்றி, கனடாவில் கல்விக்கான அனுமதிகளைப் பெறுவதையும் கடினமாக்கும். பொய்லிவ்ரேவின் தலைமையின் கீழ் கனடாவின் புலம்பெயர் கொள்கைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் இந்திய மாணவர்கள் மற்றும் புலம்பெயர் மக்களைக் கணிசமாகப் பாதிக்கலாம்.
வேலை வாய்ப்புகளுக்கான தகுதி அளவுகோல்களும் திருத்தப்படலாம், இது நிரந்தர வதிவிட வாய்ப்புகளைக் குறைக்கும் என்றே அஞ்சப்படுகிறது.