12.5 C
Scarborough

விஷ்ணு பகவானுக்கு உகந்த புரட்டாசி மாத சிறப்புகள்!

Must read

17 09 2025, புதன்கிழமை புரட்டாசி 01ஆம் தேதி பிறக்கிறது. தமிழ் மாதங்களில் 6 வது மாதமாக வருவது புரட்டாசி மாதம். சூரியன் இந்த மாதத்தில் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத் தான் புரட்டாசி மாதம் என்று அழைக்கிறோம் .
தெய்வங்களின் வழிபாடும், முன்னோர்களின் அருளாசியும், ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் தான் இந்த மாதம் புனிதமான மாதமாக விளங்குகிறது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
விஷ்ணுவுக்கு உகந்த மாதம்
காக்கும் கடவுள் பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக இம்மாதம் அமைந்துள்ளது. புனித மாதமாகவும், பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதால் வைணவக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
புரட்டாசி மாதமானது மகா விஷ்ணுவுக்கு மட்டுமல்லாமல் அவருடைய சகோதரியான அம்பிகைக்கும் உகந்த மாதமாகும். சிவபெருமானுக்கும், விநாயக பெருமானுக்கும் இம் மாதத்தில் விரதம் கடைபிடிக்கப் படுகிறது.
புரட்டாசி அமாவாசை
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை மஹாளய பட்சம் என்று குறிப்பிடுவர். புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறு நாள் பிரதமை திதியில் ஆரம்பித்து அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி அமாவாசை புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. நம் முன்னோர்கள் மொத்தமாக ஒன்று சேரக் கூடிய காலம் எனக் கருதப்படுகிறது.
கேதார கௌரி விரதம்
சக்தி சுவரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்த நாரசுவராகவும் ஒன்று பட்ட தினமே கேதார கௌரிவிரதம் ஆகும். லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புதன் கிரகத்துக்குரிய மாதம்
புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியதாக காணப்படுகிறது.
விநாயகப் பெருமானுக்கு விரதங்கள் : புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம், ஆகிய இரு விரதங்களும் விநாயகருக்கு உரியவை ஆகும். இந்த விரதங்கள் அனுஷ்டிப்பது மூலம் விநாயகரின் நல்லாசியைப் பெறலாம்.
புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தது: சனிக்கிழமை களில் விரதம் இருப்பது சிறப்பென்றாலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை களில் விரதம் மேற்கொள்வது கூடுதல் சிறப்பு. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் பச்சரிசி வெல்லம் கலந்த மாவு உருண்டை செய்து தீபம் ஏற்றி பெருமாளை வணங்க திருமணத் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாத திருவோண நட்ச்சத்திரத்தில் என்று கூறப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக, காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் அவதரித்தது புரட்டாசி மாதத்தில். இவ்வாறு புரட்டாசி மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் ஆனது.
திருப்பதி வெங்கடாசலபதியை குலதெய்வமாக கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். மாவு உருண்டை என்பது ஏழுமலையானையும், அதன் மேல் பற்ற வைக்கும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும்.
சனிக்கிழமையில் சனிபகவான் அவதரித்தார். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சனி பகவானின் கெடுபலன்களி லிருந்து பக்தர்களை காப்பாற்றுவார். இந்த நேரத்தில்
சனி பகவான் தன்னுடைய தீங்கு விளைவிக்கும் சக்திகளை இழக்கிறது என்று நம்பப்படுகிறது.
புரட்டாசி நவராத்திரி: சமஸ்கிருதத்தில் நவ என்பது ஒன்பது என்றும், இராத்திரி என்றால் இரவு என்றும் பொருள். புரட்டாசி நவராத்திரி துர்கா நவராத்திரி என்றும், நவராத்திரிகளில் மிக முக்கியமானது என்றும் கூறப்படுகிறது.
பெருமாள் பாயாசபிரியர் என்பதால் பாயாசம் செய்து படைத்து வணங்குவது முக்கியமானதாகும்.
எனவே, இம்மாதத்தில் தவறாமல் வழி பாடுகளை செய்து தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article