அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஆகியோருக்கிடையில் நேற்று தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
ட்ரம்ப் 2ஆவது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இரு தலைவர்களுக்கிடையில் இதுவரையில் நான்கு தடவைகள் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
எனினும், நேரடி சந்திப்பு எப்போது நடக்குமென உறுதியாக தெரியவில்லை. ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் அல்பானீஸி அமெரிக்கா செல்கின்றார்.
இதன்போது இரு தரப்பு நேரடி சந்திப்பு நடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டின்போது இரு தலைவர்களும் நேரில் சந்திக்கவிருந்தனர். ஆனால் மத்திய கிழக்கு போர் சூழ்நிலை காரணமாக ட்ரம்ப் அவசரமாக அமெரிக்கா திரும்பியதால் அச்சந்திப்பு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவுக்கு ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது தெரிந்ததே.