வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனும், சிறப்பு விருந்தினர்களாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் லாகினி நிரூபராஷ் , மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கெளரவ விருந்தினர்களாக மூத்த கலைஞர்களான திரு.வெ. முத்துச்சாமி மற்றும் திரு.மு. ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் இளையமுத்து துரைமுத்து அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலக முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் உடுக்கி இசை (வடமராட்சி வடக்கு வாழ் கஞைர்கள்), வரவேற்பு நடனம் (தொண்டைமானாறு அபிநயசுரபி நடன மன்றம்), கீர்த்தனை (ஞான சம்பந்தர் மன்றம்), காளிங்க நர்த்தனம் (பரத சிவாலய கலைமன்றம்), வில்லிசை (வள்ளி திருமணம்-வேணுகான சபாமன்றம்) நாடகம் (நட்பின் பரிசு வெ. முத்தச்சாமி குழுவினர்), பாரதியின் நடனம் (பரதசுரபி கலாமன்றம) என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான ” கலைப்பரிதி” “இளங் கலைஞர்” “இளங் கலைப்பரிதி”விருதுகள் மாவட்ட செயலரால் வழங்கப்பட்டதுடன், தேசிய கலை இலக்கியப் போட்டிகளின் பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்