ருமேனியாவில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு, மையவாத வேட்பாளரான நிகுசோர் டான் வெற்றி பெற்றுள்ளார்.
தீவிர தேசிய வாத வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட இவர், சுமார் 54 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். வாக்குகள் எண்ணி முடிந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீவிர வலதுசாரி வேட்பாளர் ஜோர்ஜ் சிமியோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ரசிகராவார். இவர் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதை எதிர்த்ததோடு ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கக் கூடியவராகவும் இருந்தார்.
கடந்த 4 ஆம் திகதி நடந்த முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இவர் பெற்று இருந்தார். ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சிமியோனை டான் தோற்கடித்தார். அதனைத் தொடர்ந்து டான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டார். தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய டான், ருமேனிய சமூகத்தினர் நம்ப முடியாத சக்தியை வாக்கின் மூலம் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்பவும் கடினமான காலம் எமக்கு முன்பாக உள்ளது, அதனால் தமது ஆதரவாளர்களை பொறுமையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.