யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்கள் நான்கு பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவர் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம்.
சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம்.
துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்க்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்தார்.