தாய்லாந்தில் 11 பௌத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அந்தப் பெண் பௌத்த பிக்குகளின் இரகசியப் புகைப்படங்களை வைத்து அவர்களிடம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட 12 மில்லியன் டொலர் பணத்தைப் அப் பெண்ணிடம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறவறம் பூண்ட பௌத்த பிக்குகளின் அத்தகைய செயல் பெளத்த சமயம் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளன.
தாய்லாந்து மாமன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தமது 73வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்படி 80க்கும் அதிகமான பௌத்த பிக்குகளுக்கு விடுத்த அழைப்பை இச் சம்பவத்தையடுத்து இரத்துச் செய்துள்ளார்.
“தாய்லாந்து மக்களிடையே அவர்களின் தகாத செயல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 11 பௌத்த பிக்குகளின் அங்கீகாரமும் நீக்கப்பட்டன.
குறித்த பிக்குகளை மிரட்டி பணம் பெற்ற பெண், அவர்கள் நாள் ஒன்றுக்கு 90,000 டொலர் மதிப்பிலான பொருட்களை வாங்கித் தருவதால் தாராளமாகச் செலவு செய்யும் மனநிலை தமக்கு ஏற்பட்டுவிட்டதாகத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.