13.8 C
Scarborough

‘மதராஸி’ ஒரு எச்சரிக்கையை கொடுக்கும்! – சிவகார்த்திகேயன் நேர்காணல்

Must read

‘அமரன்’ வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’, நாளை வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இதன் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றிருப்பதால், படத்துக்கும் எதிர்பார்ப்பு. நாயகியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால், மற்றும் மலையாள நடிகர் பிஜூ மேனன் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். படம் பற்றி சிவகார்த்திகேயனிடம் பேசினோம்.

‘மதராஸி’ என்ன மாதிரியான படம்?

மாஸ் கமர்சியல் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படம். அதுக்கு என்ன தேவையோ அதெல்லாம் இதுல இருக்கும். இந்தப் படம் எதை பற்றி பேசும்னா, துப்பாக்கிப் பற்றி பேசும். துப்பாக்கின்னா, ‘துப்பாக்கி’ படம் இல்லை. வட இந்தியாவுல இருந்து வர்ற வில்லன், இங்க உள்ள ஹீரோவை எப்படி எதிர்கொள்றான், அப்படிங்கறதுதான் ஐடியா. இதுல மெசேஜ் ஏதும் இல்லை. ‘இந்த மாதிரி நம்ம ஊர்லயும் நடக்க வாய்ப்பு இருக்கு’ அப்படிங்கற ஒரு எச்சரிக்கையை கொடுக்கிற படமா ‘மதராஸி’ இருக்கும்.

ரஜினி, விஜய், சல்மான் கான்னு டாப் ஹீரோக்களை இயக்கியவர், முருகதாஸ். அவர் கூட பணியாற்றிய அனுபவம்?

அவர்கிட்ட வேலை பார்க்கிறது ஈசி. ரொம்ப நிதானமா, அமைதியாதான் ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை பார்ப்பார். பரபரன்னு இருக்க மாட்டார். அவரோட வேலை பார்த்தது பிடிச்சிருந்தது. இதுல முருகதாஸ் சார் கதைக்குள்ள நான் போயிருக்கேன். வழக்கமா என் படங்கள்ல இருக்கிற, காமெடி, ஜாலி விஷயங்கள் இதுல குறைவா இருக்கும். இரண்டாம் பாதி முழுவதும் ஆக் ஷன் தான்.

சமீப காலமா நீங்க தேர்வு பண்ற படங்கள் எல்லாம், ‘கோபக்கார இளைஞன்’ வேடமா இருக்கே? இதோட டிரெய்லர்ல கூட, ‘முடிஞ்சா தொடுற பார்க்கலாம்’ அப்படிங்கற வசனம் இருக்கு…

‘மதராஸி’ படத்து கதாபாத்திர வடிவமைப்பிலயே ஒரு விஷயம் இருக்கு. டிரெய்லர்ல வர்ற ‘முடிஞ்சா தொடுறா பார்க்கலாம்’ன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி, 15 நிமிட தொடர் காட்சிகள் இருக்கு. அதோட ‘பீக்’ தான் இந்த வசனம். ‘நான் இருக்கிற வரை தொட முடியாது’ன்னு வர்ற வசனம் அது. அதை ஜஸ்ட் ஒரு பன்ச் வசனம்னு மட்டும் பார்க்க முடியாது. அது காட்சிகளோட தொடர்ச்சியா இருக்கும்.

ஒரு ஹிட் கொடுத்த பிறகு, அடுத்தப் படத்தையும் அப்படி கொடுக்கணுங்கற அழுத்தம், ஒரு ஹீரோவா உங்களுக்கு இருக்கா?

‘அமரன்’ பண்ணும்போது, அது ஒரு பயோபிக். கமர்சியலா வெற்றி பெறாதுன்னுதான் நிறைய பேர் நினைச்சாங்க. சிவகார்த்திகேயன் எப்படி ராணுவ வீரர் கேரக்டருக்கு செட் ஆவார்னும் பேசினாங்க. நான் என்ன நினைச்சேன்னா, ‘ஒரு பயோபிக்கை ஏன் கமர்சியலா பண்ண முடியாது? நம்மால ஏன் அழுத்தமான அந்த கேரக்டரை பண்ண முடியாது’ என்ற கேள்வி இருந்தது. அது ரூ.350 கோடி வசூலிக்கும்னு அப்ப நாங்க நினைச்சு பார்க்கவே இல்லை. ‘அமரன்’ பண்ணிட்டு இருக்கும்போதே, முருகதாஸ் சார், இந்தப் படத்துல கமிட் பண்ணினார். ஒரு படத்தோட ரிசல்ட் அப்படிங்கறது, படத்தோட கதை, அது ஆடியன்ஸுக்கு எப்படி போய் சேருது, அப்ப கிளைமேட் எப்படியிருக்கு, மழை இருந்தா ஆடியன்ஸ் வரமாட்டாங்க. அதனால ஒரு படத்தோட ரிசல்ட்டுக்கு பின்னால நிறைய விஷயங்கள் இருக்கு. என்னை பொறுத்தவரை என் அழுத்தம் என்னன்னா, ‘இந்தக் கதையை நான் சரியா தாங்கியிருக்கேனா என்பதை மட்டும்தான் பார்ப்பேன். அதுதான் என் வேலைன்னு நினைக்கிறேன்.

இது ‘எஸ்ஆர்கே’ (ஷாருக்கான்)வுக்கு சொன்ன கதை, இப்ப ‘எஸ்கே’வுக்கு வந்திருக்குன்னு பாடல் வெளியீட்டு விழாவுல சொன்னீங்களே?

இந்த படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது, ‘இது ஷாருக்கானுக்கு சொன்ன ஐடியா’ன்னு எங்கிட்ட சொன்னார் முருகதாஸ் சார். அவர் ஷாருக்கான் கிட்ட சொல்லும்போது முழு ஸ்கிரிப்டா அது உருவாகலை. என் கேரக்டரும் அது எப்படியிருக்கும் அப்படிங்கறதையும் மட்டும் அவர்கிட்ட சொன்னதாகச் சொன்னார்.

அடுத்து பராசக்தி?

ஆமா. பராசக்தி ஷூட்டிங் போயிட்டிருக்கு. அதோட களம் நல்லாயிருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்துல நடிக்கிறேன். வெங்கட் பிரபு இயக்கும் படத்துலயும் நடிக்க போறேன்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article