3.4 C
Scarborough

மண்சரிவு அபாய வலயமாக இலங்கையின் 30% நிலப்பரப்பு

Must read

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற தற்போதைய வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 34% மக்கள் வசிக்கின்றனர் என்றும், அந்த நிலப்பரப்பு சுமார் 20,000 சதுர கிலோமீற்றர் வரை பரந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பெய்த கடும் மழையினால் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களைப் பரிசோதிக்குமாறு 2,710 கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் 589 இடங்கள் இதுவரை பரிசோதிக்கப்பட்டு முடிந்துள்ளன என்றும் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாகப் பெறப்பட்ட செய்மதி புகைப்படங்களின்படி, 10 மீற்றருக்கும் அதிகமாக மண்சரிவு ஏற்பட்ட 1,241 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் வீடுகளுக்குப் பாதிப்பில்லாத 919 இடங்களும், வீடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய 322 மண்சரிவுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பெறப்படும் உடனுக்குடனான தகவல்களின் அடிப்படையில், அபாயகரமான நிலையில் உள்ள 15,000 இற்கும் மேற்பட்டோரை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலகங்கள் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுமக்கள் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அனுமதி பெறாத கட்டிடங்கள் அல்லது ஏனைய வகை வீடுகளில் வசிப்பவர்கள் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என வசந்த சேனாதீர தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, மண் மேடுகள் சரிந்து விழுந்தமையாலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், அது குறித்து மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article