பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. இதையடுத்து நாடு கடத்துவதில் இருந்து தப்பிக்க தாமாக முன்வந்து அந்த மாணவி அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
அமெரிக்காவின்கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் நகர்ப்புற திட்டமிடல் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் சிலர் போராட்டம் நடத்தினர். அதில் ரஞ்சனியும் பங்கேற்று யூதர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். ஹமாஸ்அமைப்புக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்நிலையில்இ மாணவர்கள் பலர் போராட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ரஞ்சனியின் கல்வி விசாவை கடந்த 5-ம் திகதிஅமெரிக்க குடியேற்றத் துறை ரத்து செய்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கு முன்னதாக தாமாகவே முன்வந்து ரஞ்சனி கடந்த 11-ம் திகதி வெளியேறினார்.
அவர் விமான நிலையத்துக்கு வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறும் காட்சிகள் அடங்கிய வீடியோவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் கிறிஸ்டி நோம் வெளியிட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு தாமாகவே வெளியேற ‘கஸ்டம்ஸ் அண்ட் பார்டர் புரடெக்ஷன் ஏஜென்சி’ செயலி உள்ளது. அந்த செயலியில் பதிவு செய்து அமெரிக்காவை விட்டு வெளியேறி உள்ளார் ரஞ்சனி.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கை கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் நாடு கடத்தி வருகின்றனர். அதுபோல் இந்தியர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் இருந்து தப்பிக்க மாணவி ரஞ்சனி தாமாக வெளியேறி உள்ளார்.