பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியிலுள்ள டீப் (DEEP) என்ற நிறுவனம் நீருக்கு அடியில் நீண்ட காலம் வாழ்வதற்குரிய முறையில் கடலில் தளமொன்றை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது.
இந்த தளம் கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 200 மீற்றர் ஆழத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் குறைந்தது ஆறு பேர் தங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் மனிதர்களால் தரைக்கு வராமல் நீண்ட காலம் மீனை போல நீருக்கு அடியிலேயே வாழ முடியும். அதாவது வாழ்வதற்குத் தேவையான ஒட்சிசன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும். பூமிக்கு அடிக்கடி வர தேவையில்லை.
இது தொடர்பாக டீப் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஈதர்டன் கூறுகையில்,
“இதை நாங்கள் ஒரு சிஸ்டமாக உருவாக்க முயல்கிறோம். அதாவது இந்த தளமானது வெறுமன போய் தங்கிவிட்டு வர மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்காது. அங்கேயே முழுக்க முழுக்க எல்லா ஆய்வுகளையும் செய்யும் வசதிகளை நாங்கள் கொண்டு வருவோம்.
கிட்டதட்ட விண்வெளி ஆய்வு மையத்தைப் போன்ற ஒன்றைக் கடலில் அமைப்போம். இது கடலைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்த நமக்கு உதவும்” என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே இது தொடர்பாக டீப் நிறுவனம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள அழுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம்.அதைத் தாங்க எந்த மாதிரியான உலோகத்தைப் பயன்படுத்தலாம் என்று பல வகை ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதற்கான பணிகள் முழுமையாக முடியும் என்றும் 2027இல் கடலில் தளம் அமைக்கப்படும் என்று டீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.