பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்த கடைசி உலகத் தலைவராக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் அறியப்படுகிறார். அந்தச் சந்திப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் விவரித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (21) காலமானார். அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று (20) வத்திக்கானிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கார்டினல் ஏஞ்சலோ கோமாஸ்ட்ரி தலைமையில் நடைபெற்ற ஈஸ்ரர் விழாவின் முடிவில், பாப்பரசர் பிரான்சிஸை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் பல கொள்கைகளை பாப்பரசர் மற்றும் வத்திக்கான் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் அவரது திட்டங்களும் அடங்கும்.
இதனிடையே, இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாப்பரசர் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது.
நேற்று (20) அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கொவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்” என தெரிவித்துள்ளார்.