அதிகரித்துவரும் கனடாவின் பணவீக்க நிலவரத்தின் படி கனடா மற்றும் அல்பட்ரா ஆகிய இடங்களில் வாழ்க்கைச் செலவு கடந்த மாதத்தைப் போல வேகமாக உயரவில்லை எனினும் பணவீக்க விகிதம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கனடாவின் பணவீக்க விகிதம் 2.3 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாகவும் அல்பட்ரா பணவீக்கம் இரண்டு சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
எரிவாயு விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியே பணவீக்கத்தைத் தடுக்கிறது. அத்துடன் நுகர்வோர் கார்பன் வரியை நீக்குவதும் மக்களுக்கு செலவுகளை மீதப்படுத்தும்.
வரியை நீக்கியதன் மூலம் எரிவாயு விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 18.1 சதவீதம் குறைந்துள்ளன.
வெளிப் பார்வையில் இது மிகவும் சிறந்த பணவீக்க அறிக்கையாகத் தோன்றினாலும் உற்று நோக்கினால் அவ்வளவு சிறப்பான முன்னேற்றம் இல்லை என்பது புரியுமென ATB நிதி நிறுவனத்தின் துணைத் தலைவரும் தலைமைப் பொருளாதார நிபுணருமான மார்க் பேர்சன் கூறினார்.
இதனிடையே பழங்கள், காய்கறிகள், இறைச்சி என அனைத்தும் இன்னும் கனடாவில் விலை உயர்ந்து செல்வதாகவே உணரப்படுகிறது. கடந்த மாதத்தை விட உணவுப் பொருட்களின் விலைகளும் சற்று அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கமும் அதிகமாக உள்ளது.
அண்மைய பணவீக்க அறிக்கை மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை போன்றவற்றைக் கருத்திற் கொண்டே ஜூன் 4 ஆந் திகதி மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்கலாமா என்பது தொடர்பில் கனேடிய மத்திய வங்கி முடிவெடுக்கவுள்ளது.