இலங்கையில் 27 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் அரைவாசிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவைத் தவிர்ப்பது, விருப்பமான உணவை குறைவான அளவில் உண்பது அல்லது பகுதி அளவுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சமாளிக்கும் உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளன அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உலக உணவுத் திட்டத்தை (WFP) மேற்கோள் காட்டி, OHCHR, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த தனது அறிக்கையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திற்குப் பிறகு நாடு முழுவதும் 16 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு 12.2 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக அதிகரிக்க இவை காரணமாகியுள்ளன என அறிக்கை கூறுகிறது.
“இலங்கையில் வறுமை விகிதம் 24.5 சதவீதமாக இருந்தது, இது 2019 ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். 2021 மற்றும் 2024 க்கு இடையில் உணவு விலைகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தன.
பாரிய பொருளாதார மீட்சி இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு மற்றும் உண்மையான ஊதியங்கள் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே இருந்தன, இதன் விளைவாக வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்தது” என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.