5.1 C
Scarborough

தோற்கடித்த முடியாத தலைவரே பிரபாகரன்: தொல். திருமாவளவன் புகழாரம்!

Must read

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் போர் உத்திகளை உலக நாடுகள் தமது இராணுவக் கல்லூரிகளில் கற்பிக்கின்றன. அந்தளவுக்கு அவர் இராணுவ ஞானம் உள்ளவராகவும், தோற்கடிக்க முடியாத தலைவராகவும் விளங்கினார்.”

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வடக்கு மாகாண மரநடுகை மாத நிகழ்வில் கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் இடையிலான நெருக்கம் ஆழமானது. பல்வேறு உரையாடல்களின் போது ஈழம் தொடர்பிலும், தான் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முரண்கள் தொடர்பிலும் அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். ‘ஈழம் மலரும் அப்போது உங்களை நான் அழைப்பேன். அதுவரை எளிய மக்களுக்காகத் தமிழகத்தில் போராடுங்கள்’ என்று அவர் கூறிய வார்த்தைகள்தான் என்னை ஊக்கப்படுத்தின.

அண்ணன் பிரபாகரன் இராணுவக் கல்லூரியில் பயிலவில்லை, போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை, அரசியல் சித்தாந்தங்களை கற்கவில்லை. ஆனால், அனைத்து விடயங்களிலும் ஞானம் படைத்தவராக இருந்தார்.

ஈழ விடயத்தில் எதற்காக நோர்வே இவ்வளவு தூரம் அக்கறை காட்டுகின்றது? எதற்காக எரிக் சொல்ஹெய்ம் இவ்வளவு ஈடுபாடு காட்டுகின்றார்? என்ற கேள்விகள் என்னைத் துருத்திக் கொண்டிருந்தன. இந்த விடயத்தை நான் அண்ணனிடம் கேட்டபோது, ‘அமெரிக்காவின் கோரமுகம் இஸ்ரேல், அமெரிக்காவின் அன்புமுகம் நோர்வே’ என்று அப்போது அவர் என்னிடம் கூறினார். அந்த வார்த்தைகளின் வலிமையை பின்நாள்களில் என்னால் உணர முடிந்தது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

நான் அமெரிக்காவைப் பற்றிக் கேட்கவில்லை. கேட்டது நோர்வே தொடர்பில்தான். ஆனால் அவர் வழங்கிய பதில், அண்ணன் பிரகாரகன் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுள்ளவர் என்றும், எவ்வளவு தூரம் அவர் ஞானம்பெற்ற தலைவராக இருந்தார் என்பதையும் 2002ஆம் ஆண்டே உணர்த்தியது. இதுதான் அண்ணன் பிரபாகரன்.

மாவீரர் தினத்தில் பிரபாகரன் என்ன பேசப்போகின்றார் என்பதற்கான காத்திருப்பைக் கொண்டிராத உலக நாடுகளே இல்லை. சிங்கள தேசத்தை மட்டுமல்லாமல், இந்திய ஆட்சியாளர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் தன் மீது கவனக் குவிவைச் செலுத்தக்கூடிய பெரும் சக்தியாக பிரபாகரன் திகழ்ந்தார்.

இன்றைய தலைவர்கள் ஒரு நாளில் பத்து மேடைகளில் பேசுகின்றனர். வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசுகின்றனர். ஆனால், அண்ணன் பிரபாகரன் ஆண்டில் ஒருமுறை மட்டும்தான் பேசுவார். அந்த உரையை உலக நாடுகள் காத்துக் கிடந்து கவனிக்கும். அவரின் உரைகள் மிக நுட்பமானவை, ஆழமானவை, தொலைநோக்குப் பார்வையுள்ளவை.

தனது உரைகளில் எந்தவொரு இடத்திலும் இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு எதிரான சக்தியாகப் பிரபாகரன் பதிவு செய்யவில்லை. ஏனெனில், இந்தியா எம்முடைய நோக்கங்களை ஏற்றால்தான் எமது அபிலாஷைகள் நிறைவேறும் என்ற தெளிந்த அறிவு பிரபாகரனுக்கு இருந்தது.” – என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மேலும் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article