வியாழக்கிழமை கனடா தபால் ஊழியர்கள் சங்கம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமும், வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கும் மேல் எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளதுள்ளதால் கனடா போஸ்டின் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தமது மேலதிக நேர வேலையை நிறுத்தியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் தாமதங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து பின் வாங்கியுள்ளமையால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் குறைந்தளவிலான கடிதங்கள், பொதிகள் காரணமாக மேலதிக நேர வேலை நிறுத்தத்தினை சமாளிக்க முடிந்தது. திங்கட் கிழமை வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பை பெற்றதிலிருந்து Crown corporation சுமார் 50 சதவீதமான அதாவது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 1.3 மில்லியனுக்கும் குறைவான பொதிகளை விநியோகம் செய்துள்ளது.
இந்த சிரமங்களில் இருந்து விடுபடுவதற்காக வாடிக்கையாளர்கள் வேறு சேவை வழங்குனர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள் இதனால் ஏற்கெனவே $3.8 பில்லியனுக்கும் அதிகமான செயல்பாட்டு இழப்புகளுக்களுடன் இயங்கிவரும் கனடா போஸ்டின் இழப்புக்கள் அதிகரிக்கும் என செய்தித் தொடர்பாளர் லிஸா லியூ கூறுகின்றார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அஞ்சல் சரிவு நீடித்து வருகிறது இது Crown corporation இன் நிதியைப் பாதிக்கிறது. கனடா போஸ்ட் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் சராசரி குடும்பம் வாரத்திற்கு இரண்டு கடிதங்களைப் பெற்றது, இது 2006 இல் வாரத்திற்கு ஏழு கடிதங்களாக இருந்தது. அதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5.5 பில்லியனில் இருந்து 55 சதவீதம் குறைந்து 2.2 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஆனால் தொழிற்சங்கப்படுத்தப்பட்ட (unionized) ஊழியர்களின் எண்ணிக்கை ஏழு சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
தற்போது தொழிலாளர்களின் சேவைகளுக்கான தேவை மிக வேகமாகக் குறைந்துள்ளதால் கூடுதல் நேர வேலை தேவையில்லை என்ற ஒரு கருத்து நிலைப்பாடும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதே போன்று Amazon மற்றும் பிற போட்டியாளர்கள் விநியோக சேவையில் துரிதமாகச் செயற்பட்டு வருவதால் தபால் சேவையின் பங்கு வெகுவாக குறைந்து வருகின்றது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் கனடா போஸ்டுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.