ஒன்ரோறியோவில் தொடர்சியாக மூன்றாவது.பெரும்பான்மையை வென்ற டக் போர்ட் மூன்று வாரங்களின் பின்னர் தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். ஆளுநர் எடித் டூமோண்ட் முதல்வர் மற்றும் அவருடைய அமைச்சர்களுக்கு புதன்கிழமை ரோயல் ஒன்ரோறியோ மியூசியத்தில் நடைபெற்ற விழாவில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இம்முறையும் 37 பேர் டக் போர்டின் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் இல்லாத போதும் சில பதவிகளில் மாற்றங்கள் உள்ளன. முன்னர் வீட்டுவசதி அமைச்சராக இருந்த போல் கெலண்ட்ரா இப்போது கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ரொப் பிளாக், டொட் மெகார்த்தி ஜில் டன்போல் ஆகியோரின் அமைச்சுப் பதவிகளும் மாற்றப்பட்டுள்ளது.
தமிழரான விஜய் தனிகாசலம் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கிறீன்பெல்ட் நில அபகரிப்பு ஊழலைத் தொடர்ந்து பதவியை இராஜினாமா செய்த முன்னாள் வீட்டுவசதி அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் அமைச்சரவைப் பதவி இல்லை என்றாலும் தொடர்ந்தும் அரசாங்க அவைத் தலைவராக செயற்படவுள்ளார். டக் போர்ட் தனது தலைமைக் குழுவை அதிகம் மாற்றப் போவதில்லை என்று முன்கூட்டியே வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
டக்போர்டின் அமைச்சரவை அறிமுகத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் மெரிட் ஸ்டைலிஸ் இதுபோன்றவற்றுக்கு இது நேரமில்லை என விமர்சித்தார். ஒன்ரோறியோவின் NDP தலைவரும் அதே அமைச்சரவையே மீண்டும் பதவியேற்றுள்ளதாக போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற அமைச்சுக்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
ஒன்ரோறியோவின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக NDP தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் 44வது அமர்விற்காக ஏப்ரல் 14 அன்று ஒனரோறியோ நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ளது.