15.5 C
Scarborough

ட்ரம்புக்கு சீனா பதிலடி!

Must read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருவரும் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி வருகின்றனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தன.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது.

இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் மிசைல்கள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூயோர்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.

சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் இராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான ‘உலகின் அரிய மண் தாது’க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article