ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 20ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இன்று (18) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பதிரகே 84.38 மீற்றர் தூரம் எறிந்து ஏழாவது இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தார்.
22 வயதுடைய ருமேஷ் தரங்க, இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இளம் வீரராக திகழ்ந்ததுடன், அவரது இச்சாதனை இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டுக்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதேபோல, நேற்று (17) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் B பிரிவில் போட்;டியிட்ட அவர், 82.80 மீற்றர் தூரம் எறிந்து குறித்த பிரிவில் 6ஆவது இடத்தையும், ஒட்டுமொத்தத்தில் 12ஆவது இடத்தையும் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இளம் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
தனது முதலாவது உலகளாவிய சிரேஷ்ட மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அவர், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் ஆகிய இரண்டு ஒலிம்பிக் சம்பியன்களையும் பின்தள்ளி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
6 சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் 12 முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் முயற்சியிலேயே 84.38 மீற்றர் தூரத்தை எறிந்த ருமேஷ், முதல் சுற்றின் முடிவில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அடுத்த நான்கு சுற்றுக்களிலும் தொடர்ந்து 7ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதன்மூலம் உலக மெயவல்லுனர் சம்பியன்ஷிப்பில் இதுவரை இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு ஆண் வீரரும் பெற்றுக்கொள்ளாத உயரத்தை அடைந்து வரலாற்றில் இடம்பிடித்தார்.
முன்னதாக 2007இல் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் சுசந்திகா ஜயசிங்க பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, உலக அரங்கில் ஒரு இலங்கை மெய்வல்லுனர் வீராரொருவர் (ஆண் அல்லது பெண்) பெற்றுக்கொண்ட மிகச் சிறந்த வெற்றியாகவும் இது அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக விளையாட்டு உலகிற்கு காலடி வைத்த ருமேஷ் தரங்க, பின்னர் ஈட்டி எறிதல் விளையாட்டை தேர்ந்தொடுத்தார். இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் பயிற்சியர்களில் ஒருவரான டோனி பிரசன்னவின் கீழ் பயிற்சி பெற்ற அவர், உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களில் இடம்பிடித்து அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார்.
2024இல் 80.00 மீற்றர் தூரத்தை அவர் பதிவு செய்த போதிலும். அந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் விழாவிற்கு தகுதிபெறும் வாய்ப்பை மயிரிழிழையில் தவறவிட்டார். எவ்வாறாயினும், தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பிரகாசித்து வந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நடைபெற்ற திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 86.50 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய இலங்கை சாதனை படைத்ததுடன், இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பிற்கும் நேரடி தகுதியைப் பெற்றார். இந்த தூரமானது இந்த ஆண்டில் பதிவாகிய 5ஆவது சிறந்த தூரமாகவும் பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதற்கிடையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 88.16 மீற்றர் தூரம் எறிந்து ட்ரினிடாட் மற்றும் டொபாகோவின் 32 வயதான கேஷோர்ன் வால்கோட் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதற்கு முன் இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றிருந்தாலும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அவர் வென்ற முதல் பதக்கம் இதுதான்.
இந்த நிலையில், 87.16 மீட்டர் தூரத்தை எறிந்த கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெள்ளிப் பதக்கத்தையும், 86.67 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த அமெரிக்க வீரர் கர்டிஸ் தொம்ப்சன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதனிடையே, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று உலகின் முன்னணி வீரர்கள் சிலரது தோல்வியாகும். இதில் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் மற்றும் 2023 புடாபெஸ்ட் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம், 82.75 மீற்றர் தூரம் எறிந்து 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அதேசமயம், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 84.03 மீற்றர் தூரம் எறிந்து 8ஆவது இடத்தைப் பிடித்தார். அவர் 2022 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2023 புடாபெஸ்ட் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த இரண்டு வீரர்களையும் பின்தள்ளி 22 வயதுடைய ருமேஷ் தரங்க 7ஆவது இடத்தைப் பிடித்தமை முக்கிய அம்சமாகும்.
இதேவேளை, இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்கேற்ற சுமத ரணசிங்கிற்கு இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு தவறிப்போனது. நேற்று நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 81.86 மீற்றர் தூரம் எறிந்த அவர், அந்தப் பிரிவில் போட்டியிட்ட 19 வீரர்களில் 8ஆவது இடத்தைப் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 37 வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், சுமேதவிற்கு 15ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
அதேபோல, இம்முறை உலக சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நதீஷா ராமநாயக்க முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார்.