மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக கிராமத்தினர் கேலி செய்ததால், டென்னிஸ் வீராங்கனையை சொந்த தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் செக்டார் 57 நகரைச் சேர்ந்தவர் 25 வயதான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவரது பெற்றோர் தீபக் யாதவ், மஞ்சு யாதவ். ராதிகா, தேசிய அளவில் டென்னிஸ் விளையாடி பல கோப்பைகளை வென்றுள்ளார். ஒரு போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். அதன் பின்னர், ஒரு அகாடமியை தொடங்கி பல குழந்தைகளுக்கு டென்னிஸ் விளையாட்டு பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 10ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மஞ்சு ஒரு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தாயின் பிறந்தநாள் அன்றைய தினம் என்பதால் தனது தாய்க்கு ஏதாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ராதிகா சமையலறைக்குள் சென்று சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அவரது தந்தை தீபக் யாதவ், ராதிகாவை துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டார். தரைதளத்தில் இருந்த தீபக் யாதவின் சகோதரர் குல்தீப் மற்றும் அவரது மகன் பியூஷ் ஆகியோர் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு முதல் மாடிக்கு ஓடி வந்தனர்.
அங்கு, ராதிகா துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கீழே கிடந்திருந்தப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ராதிகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிடதாகக் கூறினர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பொலிஸில் குல்தீப் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராதிகாவை சுட்டுக் கொன்ற தந்தை தீபக் யாதவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், டென்னிஸ் அகாடமியை நடத்தி வரும் ராதிகாவின் வருமானத்தையே நம்பி வாழ்வதாக தீபக் யாதவை கிராமத்தினர் கேலிப் பேச்சு பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ராதிகாவின் குணத்தைப் பற்றி தவறாகவும் கிராமத்தினர் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த தீபக், அகாடமியை மூடுமாறு ராதிகாவிடம் பல முறை கேட்டுள்ளார். ஆனால், ராதிகா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அகாடமியை தொடர்ந்து நடத்தி வந்ததால் ராதிகா மீது தீபக் கோபத்தில் இருந்துள்ளார். இது ஒருகட்டத்தில் தனது மகளையே கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீபக்குக்கு வந்துள்ளது. அதன்படி சம்பவம் நடந்த தினத்தன்று ராதிகாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.