13.5 C
Scarborough

காணிகளை அபகரிக்கிறது; தொல்லியல் திணைக்களம் குச்சவெளியில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம்!

Must read

தொல்லியல் திணைக்களத்தால் காணிகள் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை, குச்சவெளிப் பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத, தனியாருக்குச் சொந்தமான காணிகளையும், பிரதேசசபைக்குச் சொந்தமான காணிகளையும் கையகப்படுத்தும் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் குச்சவெளி கிராம சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

காணிகளைக் கையகப்படுத்துவதற்கான எந்த அறிவித்தலும் இன்றி தொல்லியல் திணைக்களம்
இரவோடு இரவாக அறிவிப்புப் பலகைகளைக் காட்சிப்படுத்துகின்றது என்றும், அந்தக் காணிகளில் தொல்லியல் சின்னங்கள் இல்லாதபோதும் அவற்றைக் கையகப்படுத்த தொல்லியல் திணைக்களம் முயற்சிக்கின்றது என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1985ஆம் ஆண்டுக்கு முன்னர் கடைத்தொகுதிகளுடன் காணப்பட்ட பிரதேசசபைக்குச் சொந்தமான பகுதியையும், மற்றுமொரு இடத்தில் நெற்களஞ்சியமாக காணப்பட்ட பழைய கட்டடங்களுடன் கூடிய பகுதியையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குச்சவெளிப் பிரதேச செயலரிடமும், மாவட்டச் செயலர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடமும், அரச திணைக்களங்கள், அரசியல்வாதிகளிடமும் மனு கையளிக்கப்படவுள்ளது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள குச்சவெளிப் பிரதேச செயலர், தொல்லியல் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அதிகாரத்துக்குட்பட்டது என்று தெரிவித்த அதிகாரிகள், இதுதொடர்பில் கலந்தாலோசித்து தீர்வு பெற்றுத்தர முயற்சிக்கின்றோம் என்று குறிப்பிட்டனர்’ -என்று தெரிவித்துள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article