நமது நாட்டின் எழுத்தறிவும் பொருளாதாரமும் முன்னோக்கி வந்தது, தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் குறைந்து காணப்படுகின்றமை, குடிமக்களின் ஆயுட்காலம் அதிகரித்து காணப்படுகின்றமை என அனைத்தும் நமது நாட்டில் காணப்படும் இலவசக் கல்வியின் காரணமாகவே முன்னேற்றம் கண்டு வந்துள்ளன. இலவசக் கல்வியைக் கொண்டுவருவதற்கு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவுக்குப் பெரும் போராட்டமே நடத்த வேண்டி ஏற்பட்டன. இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால், தமது தோட்டங்களில் தேங்காய் பறிப்பவர்கள் இல்லாது போய்விடுவார்கள் என்று நாட்டின் பிரபு வர்க்கத்தினர், குடும்ப செல்வாக்கு மிக்க தரப்பினர் மற்றும் பெரும் முதலாளிமார்கள் அன்று தெரிவித்தனர். பிரபு வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும் இலவசக் கல்வியை இவ்வாறு எதிர்த்தபோதும், இந்தத் தடைகளைப் பொருட்படுத்தாமல் இலவசக் கல்வி நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலவசக் கல்வியை வலுப்படுத்தி, அதனை நாம் பாதுகாக்க வேண்டும். அதேபோல், நமது அடையாளங்கள், வரலாறு மற்றும் நாகரிகத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், கல்வித் துறையைப் புதுப்பித்து, காலங்களுக்கேற்றாற் போல் நவீனங்களைச் சேர்க்க வேண்டும். வசதிபடைத்தோர்களின் பிள்ளைகள் மாத்திரம் Smart Board, Tab, Computer பாவிப்பதை விடுத்து, இலவசக் கல்வியைத் தொடர்ந்து வரும் 41 இலட்சம் பிள்ளைகளும் இதற்கான உரிமையை பெற வேண்டும். நமது அடையாளம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்த கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். என்றாலும், தற்போது முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
‘இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளின் கீழ் கல்விச் சீர்திருத்தங்களில் ஆபாசத்தைப் புகுத்துவது தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுக் கூட்டம் இன்று (10) களுத்தறை மதுகம நகரில் அமைந்து காணப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவின் திருவுருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கல்வியைப் புதுப்பிப்பது என்பது கல்வியில் ஆபாசத்தை அறிமுகப்படுத்துவதாக அர்த்தமல்ல. உலகத்திலிருந்து எடுக்க வேண்டிய விடயங்களும் காணப்படுகின்றன, அவ்வாறே, நிராகரிக்க வேண்டிய விடயங்களும் காணப்படுகின்றன. உலகக் கல்வித் தரவரிசையில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, இணையவழி கல்வியில் ஆபாசத்தை அணுகுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். கல்வியில் ஆபாசத்தைப் புகுத்துவதற்கு எதிராக மக்கள் இன்று அணிதிரண்டுள்ளனர். அடுத்த வார நடுப்பகுதியில் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதற்கான தேசிய ஒன்றியத்தை ஆரம்பிப்போம். நாட்டில் ஏற்பட வேண்டிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் சமூகத்தில் பரந்த கருத்தாடலை உருவாக்கி, சர்வதேச தொழிலாளர் சந்தையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய, கலாச்சார விழிப்புணர்வுள்ள, ஸ்மார்ட் தலைமுறையை உருவாக்க நாம் தலைமைத்துவம் வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 கல்வி அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட வேண்டும்.
ஒரு நாடாக முன்னேற, ஸ்மார்ட் நாடு உருவாக்கப்பட வேண்டும். பாலர் பாடசாலை தொட்டு ஸ்மார்ட் மாணவர், ஸ்மார்ட் இளைஞர்களை உருவாக்கி, ஸ்மார்ட் நாட்டை உருவாக்க முடியும். இதன் மூலம், நமது நாட்டின் நாகரிகத்திற்கு ஏற்ப செயல்படும், நாகரிக கட்டமைப்பிற்குள் அமைந்த இலவசக் கல்விச் சீர்திருத்தம் நடக்க வேண்டும். புதிய கல்வி முறையை உருவாக்குவது போலவே, அரசியலமைப்பில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் போலவே கல்வியும் அடிப்படை உரிமையாகவும் மனித உரிமையாகவும் அமைந்து காணப்பட வேண்டும். அவ்வாறே இலவச சுகாதாரப் பராமரிப்பும் அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 அன்று நாம் White Paper, Green Paper தொடர்பில் கருத்து சொன்ன போது தற்போதைய ஆளும் தரப்பினர் எம்மைப் பார்த்து பரிகசித்தனர்.
தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், வெட்ஸ்மினிஸ்டர் முறைமையில் White Paper, Green Paper களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சி முன்மொழிந்து கோரிய சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் இதற்கு பரிகாசம் செய்து, அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர்.
இந்த சீர்திருத்தங்கள் தொடர்பில் எந்த முக்கியத்துவமும் காட்டாமல் வெறுமனே Power Point Presentation ஒன்றை மாத்திரமே இந்த அரசாங்கம் முன்வைத்தது. இதன் காரணமாக, கல்வியும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நாடு முன்னேற வேண்டுமானால் STEAM கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதைச் செய்வதோடு மட்டுமல்லாமல், வரலாற்றையும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த சீர்திருத்தங்களை முன்மொழிந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கைப் போக்கை நாட்டின் தேசியக் கொள்கைக்கு கொண்டு வரக்கூடாது. ஒரு தனிநபரின் சுதந்திரத்தையும் விருப்பத்தையும் நாட்டில் உள்ள மற்றவர்களின் விருப்பத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றிவிட முடியாது.
🟩 தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை நீக்க வேண்டும்.
சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர கொண்டு வந்த இலவசக் கல்விக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டுமானால், தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை நீக்க வேண்டும். இது தொழில் சந்தையை கூட பாதிக்கும் ஒரு விடயமாக அமைந்து காணப்படுகின்றன. எனவே சகல பாடசாலை பிள்ளைகளும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை சரளமாகப் பேச முடியுமான இயலுமை வாய்ந்தவர்களாக காணப்பட வேண்டும். குறுகிய மனப்பான்மையுடன் இருந்து கொண்டு, நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று கூறுவதற்குப் பதிலாக, உலகின் 193க்கும் மேற்பட்ட நாடுகளுடன் போட்டியிட மக்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

