கனடாவின் பசுமைக் கட்சியின் (Green Party of Canada) நீண்டகாலத் தலைவரான எலிசபெத் மே எதிர்வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக கட்சி மீண்டும் புதிய தலைவரைத் தேடும் நடவடிக்ககைளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சித் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மே தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வுக்கு பெரிய திட்டங்கள்
2025 இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுக்கு பெரிய திட்டங்கள் வகுத்துள்ளோம் என மே தனது மின்னஞ்சலில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரே பசுமைக் கட்சி உறுப்பினராக இருக்கும் எனது குரல், தலைவராக இருப்பதன் மூலம் மேலும் வலிமையடைகிறது என தெரிவித்துள்ளார்.
கட்சியின் நாடாளுமன்றக் குழுவை விரிவுபடுத்துவதற்கு முன்னர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், பருவநிலை நெருக்கடி, பொருளாதார மலிவு, மற்றும் மோதல் பகுதிகளில் நீதி மற்றும் அமைதி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் மே குறிப்பிட்டார்.
தலைவராக தனது முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாக நிதி திரட்டுதலை எப்போதும் கருதுவதாகவும், 2025 ஆம் ஆண்டை வலுவான நிதி நிலையில் முடிப்பதற்கு தீவிரமாக உழைப்பதாகவும் மே தெரிவித்துள்ளார்.
அண்மைய தேர்தல்களில் பசுமைக் கட்சி குறிப்பிடக்கூடிய பெறுபேறுகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.