சில மாதங்களுக்குமுன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரான Pierre Poilievre, அடுத்த சில ஆண்டுகளில், கனடாவுக்கு வருபவர்களைவிட கனடாவிலிருந்து வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது ஆசை நிறைவேறிவிட்டதுபோல் தோன்றுகிறது. ஆம், கனடாவிலிருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவிலிருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக சமீபத்திய கனேடிய புலம்பெயர்தல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விலைவாசி உயர்வு, வீடுகள் தட்டுப்பாடு அல்லது ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ளும் நோக்கம் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், மொத்தத்தில் கனடாவிலிருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது மட்டும் உண்மை.
2024ஆம் ஆண்டில், 106,134 பேர் கனடாவை விட்டு வெளியேறியுள்ளதாக கனடா புள்ளியியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவுபேர் கனடாவை விட்டு வெளியேறியுள்ளது 2024இல்தான்.
விடயம் என்னவென்றால், அந்த நிலை இந்த ஆண்டும் தொடர்வது போல் தோன்றுகிறது. ஆம், 2025ஆம் ஆண்டில் முதல் காலாண்டிலேயே, கனேடிய வரலாற்றிலேயே முதல் முறையாக 27,086 பேர் கனடாவிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் மீண்டும் கனடாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.
குறிப்பாக, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலிருந்துதான் அதிக அளவில் மக்கள் வெளியேறிவருகிறார்கள்.
2024ஆம் ஆண்டில், ஒன்ராறியோவிலிருந்து 50,680 பேர் வெளியேறியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை, ஒன்ராறியோவுக்கு அடுத்த இடத்திலிருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை ஒப்பிடும்போது 2.5 மடங்கு அதிகமாகும்!
சொல்லப்போனால், கடந்த ஆண்டு கனடாவிலிருந்து வெளியேறியவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு மக்கள் (48 சதவிகிதம் பேர்), ஒன்ராறியோவிலிருந்துதான் வெளியேறியுள்ளார்கள்.
2025ஐப் பார்த்தால், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே கனடாவிலிருந்து வெளியேறியவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகம்பேர் ஒன்ராறியோவிலிருந்துதான் வெளியேறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.